“இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆழமான மற்றும் உறுதியான அர்ப் பணிப்புடன் உள்ளார்.” – இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா தெரிவித்தார்.
‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத் தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்தியாவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் இந்தத் திட்டம் மிகமுக்கியமான ஒன்றாகும். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் இந்திய அரசினதும் பிரதமர் நரேந்திர மோடியினதும் ஆழமான மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை இது வலியுறுத்துகிறது.
இந்த வீடமைப்புத் திட்டமானது ஆறு மாகாணங்களில் உள்ள 250 இற்கும் மேற்பட்ட தோட்டங்களில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்குப் பயனளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு மேலதிகமாகவே இந்த 10,000 வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 4000 வீடுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தின் ஒரு வீட்டு அலகிற்கான செலவு மூன்று மடங்காக அதிகரித்திருப்பதன் மூலம், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் திட்டத்திற்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இதனால், இந்திய அரசிற்கு பெருமளவு தொகையை பொறுப்பேற்க வேண்டியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகளை வழங்கி அவர்களை வலுப்படுத்துவதே வீட்டுத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் ஊடாக அவர்களின் நல்வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படும்.
லயன் அறைகளுக்குப் பதிலாக இரண்டு படுக்கையறைகள் கொண்ட சொந்த வீட்டில் வசிக்கும் அவர்களின் கனவை இந்தத் திட்டம் நிறைவேற்றும்.” என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
