” 200இல் மலையகம் மாற்றத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் தற்பொழுது இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நடைபெற்று வருகின்றன. அநேகமான நிகழ்வுகளில் எமது பின்னடைவுகள் குறைபாடுகள் தொடர்பாகவுமே அதிகமாக பேசப்படுகின்றன.
இது சர்வதேசத்திற்கு எமது மலையக மக்கள் தொடர்பாக தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றது.குறிப்பாக இலங்கையிலும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் மலையக மக்கள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் என்றும் வீடுகளில் வேலை செய்வதற்காக இருக்கின்ற ஒரு சமூகம் என்ற புரிதலே இருக்கின்றது. எனவே இந்த மனநிலையை மாற்ற வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.அதனை செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுடையது.இதனை வேறு யாரும் எமக்காக செய்ய மாட்டார்கள்.
இந்த நிகழ்வு என்பது தனியே எங்களுடைய கட்சிக்கோ அல்லது தனிப்பட்ட என்னுடைய நிகழ்வோ அல்ல. இது நம் அனைவருடைய நிகழ்வு. இது மலையக மக்களுடைய நிகழ்வு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் மலையக சமூகமாக நாம் இந்த நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்களை கடந்துள்ள இந்த நிலையில் நாம் பெற்ற வெற்றிகள் நமது சாதனைகள் சர்வதேசத்தில் எமது சமூகத்தின் பங்களிப்பு போன்ற விடயங்களை வெளியுலகத்திற்கு கொண்டு செல்வதே பிரதான நோக்கமாகும்.
எமது சமூகத்தை சார்ந்தவர்கள் நீதித்துறையில் வைத்தியத்துறையில் பொறியியல்துறையில் காவல்துறையில் கல்வித்துறையில் ஊடகத்துறையில் என அனைத்து துறைகளிலும் உயர்ந்த இடங்களும் உயர்பதவிகளையும் வகிக்கின்றார்கள். இவர்களை அடையாளப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
இந்த நிகழ்வில் இந்த அனைத்து துறைகளையும் சார்ந்தவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவந்து அவர்கள் பெற்றுக் கொண்ட வெற்றிகளுக்காக அவர்களை கௌரவிப்பதும் அவர்களை உலகறியச் செய்வதுமே முக்கிய நோக்கம்.
எனவே இந்த நிகழ்வானது அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாம் அனைவரும் இணைந்து ஒரு குடையின் கீழ் ஒன்றினைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.இதற்காக உங்கள் அனவைரையும் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு நாம் வேண்டுகின்றோம்.
குறிப்பாக இந்த நிகழ்வின் மூலமாக கடந்த 200 வருடங்களில் எங்களுடைய வளர்ச்சிக்காக உயிர் நீத்த மலையக தியாகிகள் இருக்கின்றார்கள். அவர்களை நினைவு கூர வேண்டியதும் அண்மைய காலங்களில் அரசியலில் தொழிற்சங்க செயற்பாடுகளில் தங்ளை முழுமையாக அர்ப்பணித்து உயிர் நீத்த தலைவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களை எங்களுடைய எதிர்கால சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பும் எம்முடையது.
எனவே இந்த நிகழ்வின் வெற்றி என்பது நம் அனவைருடையது எனவே அனைவரும் இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.










