” வடக்கு, கிழக்கில் கல்வி அபிவிருத்தி என வரும்போது ஆளுங்கட்சி, எதிரணி என பாராது அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். அதேபோன்றதொரு அரசியல் கலாச்சாரம் மலையகத்திலும் உருவாக வேண்டும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் கல்வி அபிவிருத்தி என்று வருகின்றபோது அப்பகுதிகளிலுள்ள அரசியல்வாதிகள் ஆளும் கட்சி , எதிர்கட்சி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள்.அதன் காரமணாக அங்கு கல்வி நிலை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது.இதனை நாம் முன் உதாரணமாக கொள்ள வேண்டும்.
மலையகத்திலும் இதனை அதாவது இப்படியான ஒரு கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நாம் கல்வியில் முன்னேற்றமடைய முடியும்.
ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சி என்பது அவர்களுடைய பொருளாதாரத்திலோ அல்லது சொத்து மதிப்பிலோ மதிப்பிடப்படுவதில்லை.முழுமையாக கல்வியை மையப்படுத்தியதாகவே அது அமைந்துள்ளது.எனவே நாங்கள் எங்களுடைய சமூகத்தை சிந்தித்து செயற்பட வேண்டுமாக இருந்தால் கல்வியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு