நாங்கள் அன்று நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்காக விதைத்த விதைகள் இன்று விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வளர்ச்சியின் ஒரு கட்டமாகவே தற்பொழுது வெளியாகியுள்ள க.பொ.த பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. இந்த கல்வி வளர்ச்சியையே நான் எதிர்பார்த்தேன் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த பெறுபேறுகள் குறிப்பாக மலையக பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதற்கான வாய்ப்பு ஏறடபட்டுள்ளது. இந்த வளர்ச்சி தொடருமானால் எங்களுடைய மலையகத்தின் மாற்றம் வெகு தொலைவில் இல்லை.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் அநேகமான பாடசாலைகள் மிகவும் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக பின்தங்கிய பல பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் முதல்முறையாக பல்கலைக்கழகழகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றார்கள்.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி செய்த கணித, விஞ்ஞான பாடசாலைகளிலும் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்துள்ளன.
மலையகத்தின் கல்வி வளர்ச்சியில் எனது பங்களிப்பு இருக்கின்றது. மாகாண கல்வி அமைச்சராக 15 ஆண்டுகள் கல்வி இராஜாங்க அமைச்சராக 5 ஆண்டுகள் என எனது சேவை இருந்திருக்கின்றது.
ஆனால் அன்றை மாகாண கல்வி அமைச்சு ஒத்துழைத்திருந்தால் இன்னும் அதிகளவான அபிவிருத்திகளை செய்திருக்க முடியும் என்ற விடயத்தையும் மிகவும் கவலையுடன் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
