பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் மலையக சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் உட்பட அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், சிறுமியொருவரை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 15.07.2021 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.










