“மலையக தமிழர் என்பதே எமது அடையாளம்” – நுவரெலியாவில் போராட்டம்!

” இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வாழ்ந்து வரும் மலையக தமிழ் மக்களை, தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில் “மலையக தமிழர்” என அடையாளப்படுத்தி பதிவு இடம்பெற வேண்டும்.” –

இவ்வாறு கோரிக்கை முன்வைத்து கண்டி சமூக அபிவிருத்தி தாபனம் மற்றும் தோட்ட, கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் என்பன இணைந்து நுவரெலியா மாநகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

இப்போராட்டத்தில் 250 இற்கு அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். மும் மொழிகளிலும் தமது கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை ஏந்தி ,கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போது வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,

எமது அடையாளம் மலையக தமிழர்,

வீட்டுரிமை வேண்டும்,

காணி உரிமை வேண்டும்,

தவிர்க்காதே தவிர்க்காதே தமிழ் மொழியை தவிர்க்காதே,

தோட்ட வைத்தியசாலைகளை தரம் உயர்த்து,

பாகுபாடு காட்டாதே என்றெல்லாம் கோஷங்களை எழுப்பினர்.

“ மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சகல அரச ஆவணங்களிலும் இந்தியா வம்சாவளி என நாமம் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள குடிசன மதிப்பீட்டு படிவத்தில் இந்தியா வம்சாவளி என்ற அடையாளத்தை மாற்றி “ மலையக தமிழர்” என்ற பதம் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில் குடிசன மதிப்பீட்டு பத்திரத்தில் “மலையக தமிழர்” என்று பதிவு செய்ய வேண்டுமென்பதே எமது முக்கிய கோரிக்கையாகும்.

இன்று பெப்பிரவரி (20.02.2024) உலக சமூக நீதி தினமாகும். இன்று “ மலையகத் தமிழர்” என்ற இனக் குழுவை குடிசன கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் கண்டி சமூக அபிவிருத்தி தாபனம் ஈடுபட்டுள்ளது.” – என்று சமூக அபிவிருத்தி தாபன நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் யோகேஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் பத்து பேர் அடங்கிய குழுவினர் , நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனுவை, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) டி.கே.கவிசேகரவிடம் கையளித்தனர்.

அதேவேளை நகரத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகளும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.

ஆ.ரமேஷ், டி. சந்ரு, நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles