மலையக தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு வருட இறுதிக்குள் தீர்வு

மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் அதற்கான செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் அதற்கான 50 வீதமான தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மயந்த திசாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

மாணவர்களின் போசாக்கு குறைபாடு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். குறிப்பாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வாறான அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர். அந்த நிலைமையை நிவர்த்திப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு கல்வி இராஜாங்க அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசேட வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் அதற்கான 50 வீத தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles