மலையகத்தில் வாழ்கின்ற மக்கள் காணி உரிமையைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், இந்த மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மனம் வரவில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போது மலையக மக்கள் மீது அதிக அக்கறை காட்டுவதும், ஆட்சிக்கு வந்ததும் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் வழமை – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாரம்பரம் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு,
இந்த அரசாங்கத்தின் மூன்றாவது வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் அதிக நம்பிக்கை வைத்து பெருவாரியாக வாக்களித்தனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. குறிப்பாக, டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தகரம் வழங்கினால்கூட 10 இலட்சம் ரூபா வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் அரசாங்கம் அறிவித்த நிவாரணங்களும் கிடைக்கவில்லை, காணியும் கிடைக்கவில்லை, வீடும் கட்டிக்கொடுக்கப்படவில்லை.
றம்பொடை, கொன்கோடியா, கந்தபளை, ராகலை, பொகவந்தலாவை, அகரபத்தனை, ஹங்குராங்கெத்த, மாத்தளை, கண்டி போன்ற பகுதிகளில் இன்னும் கூடாரங்களில் தங்கி வாழ்கின்ற நிலைமையே காணப்படுகின்றது.
அதேபோல, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான மாற்றுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, வேவெண்டன், பொகவந்தலாவை சென்மேரிஸ், டியன்சின், யொக்ஸ்போர்ட் போன்ற பாடசாலைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
மலையகத்தில் வாழ்கின்ற மக்கள் காணி உரிமையைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், இந்த மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மனம் வரவில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போது மலையக மக்கள் மீது அதிக அக்கறை காட்டுவதும், ஆட்சிக்கு வந்ததும் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் வழமை.
இந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மலையக மக்கள் மீது அதிக அக்கறையுடன் பேசினார்கள். லயன் வாழ்க்கை முறையில் இல்லாமல் செய்வோம் என்றது. ஆனால், இன்று அதனைச் செய்வதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.
நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மட்டும்தான் இந்த மலையக மக்களுக்காக 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்கி, வீடுகளையும் கட்டிக்கொடுத்து, அதற்கான காணி உறுதிகளையும் வழங்கினார்கள். நல்லாட்சி காலத்தில் மட்டும் 8,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று உலகம் எவ்வளவோ முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், இந்த மலையக மக்கள் மட்டும் 200 வருடங்கள் கடந்தும் இன்னும் லயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமை மாறி காணி உரிமை பெற வேண்டும் என்றால், கட்சி, அரசியல் பேதங்கள் இல்லாமல் ஒவ்வொருவரும் போராட முன்வர வேண்டும். அப்போதுதான் காணி உரிமையை நோக்கிச் செல்ல முடியும்.
இந்திய அரசாங்கம் நல்லாட்சி காலத்தில் 10,000 இந்திய வீடமைப்புத் திட்டங்களைச் செய்வதற்கு உறுதியளித்தது. இந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் 1,000 வீடுகள்கூட மக்களுக்கு கையளிக்கப்படவில்லை. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தில் நான்கு வருடங்களில் 4,000 இந்திய வீடமைப்புத் திட்டங்களை நிறைவு செய்தோம்.
இந்த அரசாங்கத்தின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டம் இது. முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, 4,000 வீடுகளை நிர்மாணிப்பதாக சபையில் கூறினார். ஆனால், 400 வீடுகளைக்கூட கட்டி முடித்து மக்களுக்கு வழங்கவில்லை.
நல்லாட்சி காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிதியிலிருந்து வீடுகளை கட்டுவதற்கு 200 கோடி ரூபா ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் இந்திய வீடுகளை மாத்திரமே நிதி ஒதுக்கீடாகக் காட்டுகிறது. அரச நிதியில் வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 13,000 மில்லியன் ரூபா மலையக அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், தேயிலை, தென்னை, இறப்பர் அபிவிருத்திக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான அபிவிருத்திக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, கொழும்புக்கு பங்களாவுக்கோ, ஹோட்டலுக்கோ வேலைக்கு ஆள் தேவை என்றால் மலையக இளைஞர்களையே தேடுகின்றார்கள் என்று கூறினார். அந்த மலையக இளைஞர்களுக்கான மாற்றுத் தொழில் எங்கே? இதனை மலையக இளைஞர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக 200 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. அதற்கு நாங்கள் முழுமையாக ஆதரவு வழங்கினோம். இம்முறையும் 200 ரூபாவை தொடர்ச்சியாக வழங்குவதாக முன்மொழிந்துள்ளார். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இன்று அன்றாடத் தேவையான பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்க வேண்டும். அதனை நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றோம். எந்த அரசாங்கமும் அதனைச் செய்வதற்குத் தயாரில்லை.
2045ஆம் ஆண்டு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தம் நிறைவடைந்தாலும், அப்போதைய அரசாங்கம் அதனை மீண்டும் வழங்கும் என்பதே உண்மை. அதனை யாரும் கிழித்தெறிய முடியாது. கிழித்தெறிவதால் தடுக்கவும் முடியாது.
பெருந்தோட்டக் காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நாம் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடர்பில் தொழிற்சங்கம் என்ற ரீதியில் எம்முடனும் கலந்துரையாட வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
மீண்டும் குத்தகைக்கு வழங்கும் முன் மலையக மக்களுக்கான 10 பேர்ச்சஸ் காணி உறுதி செய்யப்பட வேண்டும். பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகள் உறுதி செய்யப்பட வேண்டும். தரிசு நிலங்கள் அதே பகுதியில் வாழும் மலையக இளைஞர்களுக்குத் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு சாதகமான முறையில் குத்தகை ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் சில வைத்தியசாலைகளை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வதற்கு முன்மொழிந்துள்ளது. அதனை வரவேற்கின்றோம். அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் கிளங்கன், மஸ்கெலியா வைத்தியசாலைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஹட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முன்மொழியப்பட்டது. அதற்காக பட்டாசு கொளுத்தி, பால் அபிஷேகம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஹட்டனில் ஒரு அபிவிருத்திகூட இடம்பெறவில்லை. இன்றும் ஹட்டன் சிறிய மழைக் காலங்களில்கூட வெள்ளத்தில் மூழ்குவதை நாம் பார்க்கின்றோம்.
இவ்வருடமும் நகர அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவதாக முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழிவாக மட்டும் இல்லாமல், செயல்வடிவம் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.










