மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் எம்.பி தெரிவித்தார்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவமிக்கவர்கள், சிறப்பாக தோட்டங்களை நடத்தி அரசாங்கத்திற்கு டொலர்களைப்பெற்றுக் கொடுக்கக்கூடிய திறமை உள்ளவர்கள் என சபையில் தெரிவித்த அவர், அவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மாதாந்தம் 3000 ரூபா முதல் 5000 ரூபா வரை அறவீடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விலை அதிகரிப்பு நிலவும் நிலையில் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று மிகவும் கஷ்டமான வாழ்க்கையை நடத்தும் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து அவ்வாறான அறவீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
நாட்டில் 25 வீதமாக உள்ள சிறுதோட்ட தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் 75 வீதமான ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்ற போது 75 வீதமாக உள்ள பெருந்தோட்ட ங்களில் இருந்து 25 வீதமான தேயிலையே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கு அந்த தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையே காரணமாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட்டால் அதன் மூலம் சிறந்த ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
