மஹிந்தானந்த காணி பறித்தபோது இ.தொ.கா. மௌனம் காத்தது ஏன்?

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக இருந்த இ.தொ.கா.வின் தலைவர் முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக இருந்தார். அன்று காணி அபகரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்த இ.தொ.கா. ஏன் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வந்தது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம். ராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிகையில்…

” கடந்த அரசாங்கத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காணி பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் இ.தொ.கா. நிதிச் செயலாளர் எம். ராமேஸ்வரன் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.இது உண்மைக்கு புறம்பான விடயம் ஆகும். அவ்வாறு அநியாயம் நடந்திருந்தால், அன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த இ.தொ.கா. எதிர்த்துக் குரல் கொடுக்காமல் ஏன் மௌனம் சாதித்திருந்தது?

மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மகிந்தானந்த அலுத்கமகே நாவலப்பிட்டிய நகருக்கு அண்மையில் உள்ள இம்புல்பிட்டிய தேயிலைத் தோட்டத்தில் 100 ஏக்கர் காணியை சுவீகரித்து பெரும்பான்மை மக்களுக்கு பிரித்துக் கொடுத்திருந்தார்.

அப்போது கெபினட் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவித்திருக்கவில்லை. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வதென்றால் மக்களின் ஒப்புதல் இல்லாமலும், தொழிற் சங்கங்களின் அனுசரணை இல்லாமலும் செய்திருக்க முடியாது. அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த இ.தொ.கா. ஏன் தட்டிக் கேட்டிருக்கக் கூடாது. அவ்வாறு குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளதை இ.தொ.கா. வால் நிரூபிக்க முடியுமா?

இன்றைய அரசாங்கம் கண்டி மற்றும் வட்டவளை பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் தேயிலைக் காணிகளில் பாற்பண்ணையை ஊக்குவிக்கும் வகையில் தனியாருக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் மலையக இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இ.தொ.கா. கூறியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை அபிவிருத்திக்கான கெபினட் அமைச்சை தன்வசம் வைத்திருந்த இ.தொ.கா. எத்தனை மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கூற முடியுமா?

அத்தோடு, பாற்பண்ணை அமைக்கும் போது நவீன தொழில் நுட்ப வசதிகளே அநேகமாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மனித வளம் குறைவாகவே பயன்படுத்தப்படும். அதில் எத்தனை வீதம் மலையக இளைஞர்களுகுக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? தொடர்ந்தும் எமது மக்களை மாடு மேயப்பதற்குத் தான் பயன்படுத்த வேண்டுமா? வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டக் காணி இரத்தினக்கல் அகழ்வுக்காக ஏலம் விடப்படவுள்ளது.

இதில் தோட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அம்பகமுவ அபிவிருத்திக் குழு தலைவராக உள்ள ராமேஸ்வரன் எம்.பி. எடுத்த நடவடிக்கை என்ன? ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இதில் பங்கு உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Paid Ad
Previous articleசிவப்பு அபாய வலயத்திலிருந்து இலங்கை இன்னும் மீளவில்லை (காணொளி)
Next articleCOVOD-19 -19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது