முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் ஏன் மீண்டும் குடியேறினார் என்பது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் இருந்து அவர் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றார். இதுவிடயத்தில் அரசியல் பிரசாரத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்தது.
இந்நிலையில் கொழும்பு நுகேகொடை பகுதியில் மஹிந்த ராஜபக்ச தற்போது மீண்டும் குடியேறியுள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவியபோது, அவர் கூறியவை வருமாறு,
“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பு வந்துவிட்டார். எமது கட்சிக்கு அவர் தொடர்ந்து ஆலோசனை வழங்கிவருகின்றார். கட்சியை வழிநடத்தியும் வருகின்றார். கொழும்பில் இருந்து அந்த பணியை செய்வார்.
எனது தந்தை தனியாகவே வாழ்கின்றார். அவர் சுதந்திரமாக இருக்கவே விரும்புகின்றார். அதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.
எமது நண்பர் ஒருவரே மஹிந்த ராஜபக்சவுக்கு வீட்டை வழங்கியுள்ளார். அங்கிருந்தே அரசியல் நடவடிக்கையிலும் மஹிந்த ராஜபக்ச ஈடுபடுவார்.” – என்றார் நாமல் ராஜபக்ச.










