தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாணசபைத் தேர்தல் ஊடாக பலவீனமடைவதை இந்தியா விரும்பாது. எனவே, மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உள்ளாட்சிசபைத் தேர்தலை முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு மாகாணசபைத் தேர்தலை ஒப்பிட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வடமத்திய மாகாணசபையை மட்டுமே கைப்பற்றக்கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது அந்நிலைமையும் மாறியுள்ளது. ஆளுங்கட்சியால் ஒரு சபையைக்கூட கைப்பற்ற முடியாமல்போகும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த அரசாங்கம் இல்லை. எனினும், சர்வதேச அழுத்தங்களுக்கு அஞ்சுகின்றது. இப்பிரச்சினையின்போது இந்திய அழுத்தம் இல்லை. இந்தியா கூறுவதற்கிணங்க இந்த அரசாங்கம் செயற்படுகன்றது. எனவே, மாகாணசபைத் தேர்தல் ஊடாக அரசாங்கம் பலவீனமடையதை இந்தியா விரும்பாது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.










