மாணவர்கள் காணாமல்போனமை குறித்து தளபதிகள் கைது!

2014இல் 43 மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பாக மெக்சிகோவின் ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளை மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

காணாமல் போன மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் பிள்ளைகளின் தலைவிதிக்கான அரசாங்கத்தின் பொறுப்பை தொடர்ந்து கேள்வி எழுப்பியதோடு, பதிலளிக்குமாறு கோரி வந்தமை, குற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.

2014 இல் காணாமல் போனவர்கள் பொது எதிர்ப்புகளைத் தூண்டியதோடு, அப்போதைய ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோவின் அரசாங்கத்தின் சர்வதேச கண்டனத்திற்கு வழிவகுத்தது.

காணாமல் போன மாணவர்களின் உறவினர்களும் நண்பர்களும் குற்றம் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து நீதி கேட்டு முடிவில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நீட்டோவின் ஆட்சி உண்மையை வெளிக்கொண்டுவர அனுமதிக்கவில்லை.

இதற்கிடையில், 2019 இல், ஜனாதிபதி அண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோரின் அரசாங்கம் இந்த காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பித்தது.

இதையடுத்து தோமஸ் தெரோன் உட்பட பல முன்னாள் அதிகாரிகளுக்கு அதிகாரிகள் கைது பிடியாணை பிறப்பித்துள்ளனர். இந்தக் கடத்தல்களின் போது, அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த தோமஸ் தெரோன் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இஸ்ரேலுக்குத் தப்பிச் சென்றார்.

இதற்கிடையில், முன்னாள் சட்டமா அதிபர் ஏசுஸ் முரியோ கரம், கடந்த மாதம் பலவந்தமாக காணாமல் போதல், சித்திரவதை மற்றும் தொடர்புடைய சம்பவத்தில் நீதியைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அயோத்சினாப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களைக் கடத்தியமை தொடர்பாக தென்மேற்கு மெக்சிகோவில் இகுவாலாவில் நிலைகொண்டிருந்த 27ஆவது காலாட்படையின் அப்போதைய தளபதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மெஹியா தெரிவித்தார். நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதி அமைச்சர் மெஹியா கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை, ஆனால் அல் ஜசீரா ஊடக வலையமைப்பு அந்த நேரத்தில் இகுவாலா முகாமின் தளபதி ஜோஸ் ரொட்ரிக்ஸ் பெரேஸ் என தெரிவித்துள்ளது.

1968ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி, த்லதேலோல்கோ படுகொலையின் ஆண்டு நினைவேந்தலில் பங்கேற்க மெக்சிகோ தலைநகருக்கு பேருந்தில் பயணித்த அயோத்சினாப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் காணாமல் போனமைக்கு இராணுவ அதிகாரிகள் மீது உண்மையை கண்டறியும் ஆணைக்குழு குற்றம் சாட்டியது.

அவசர அழைப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், “காணாமல் போன 43 மாணவர்களில் 6 பேர் பல நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, கமாண்டர் பெரெஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்பதை உறுதிப்படுத்தியதாக ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கிய மெக்சிகன் உள்விவகார துணைச் செயலாளர் அலஹந்த்ரோ என்சினாஸ், கடந்த ஓகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.

“அந்த தகவல்களுக்கு அமைய இந்த ஆறு மாணவர்கள் கொண்டாட்டத்திற்குப் பின்னர் நான்கு நாட்கள் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது, அவர்கள் கர்னல் ஜோஸ் ரொட்ரிக்ஸ் பெரெஸின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.”

உள்ளூர் போதைப்பொருள் கும்பலிடம் மாணவர்களை ஒப்படைத்த பின்னர் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் எரிந்த எலும்புகள் மூன்று மாணவர்களுடன் பொருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, 2014 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி கோரி மாணவர்களின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.

Related Articles

Latest Articles