தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (11) பாடசாலை மாணவி ஒருவர் சக மாணவருடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது வலுக்கட்டாயமாக வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,பிரதான சந்தேக நபர் அம்பாறை நகரத்தில் வைத்து கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர், கடத்திச் செல்லப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாணவியை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் வேனின் சாரதி கடந்த 14 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பிரதான சந்தேக நபரின் நண்பனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.