அகில இலங்கை தமிழ் மொழித் தின மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதி புதன் கிழமை மாறை/ தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. இதில் மாத்தறை மற்றும் அகுரஸ்ஸ வலய மட்டப் பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன.
எழுத்தாக்கப் போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஏனைய போட்டிகளே குறித்த தினத்தில் நடைபெறவுள்ளது. பேச்சு, பாஓதல், இசை. நடனம், விவாதம், நாடகம் போன்ற போட்டிகளே பல்வேறு பிரிவு மட்டங்களில் நடைபெறவுள்ளன.
முலட்டியன வலய கல்விப் பணிப்பாளரும், தென்மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.டீ.எம். ஆகில் தலைமையில் நடைபெறும் இப் போட்டிகளில் பாடசாலை மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் யாவும் கடந்த வாரம் நடைபெற்றன. மூன்று மாவட்டங்களிலும் வெற்றியீட்டிய சகல போட்டியாளர்களும் மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெறுவர் என மாவட்ட இணைப்பாளர் அஷ்ஷேக் எம்.எம்.எம். முன்திர் (நளீமி) ஆசிரியர் தெரிவித்தார். தென் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ம் , 6ம் திகதிகளில் வெலிகம மதுராபுர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










