மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோத கட்டட நிர்மாணபணிகள் காரணமாக இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் முற்றிலும் வற்றிப்போகக்கூடிய ஒரு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக கெபெக்ஸ் ஸ்ரீலங்கா மாத்தளை மாவட்ட பணிப்பாளரும் சூழலியலாளருமான காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் அவர் மாத்தளை மாவட்ட மக்கள் தங்களது குடிநீர் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இயற்கை நீர் வளங்களை மையமாகக் கொண்டு தோண்டப்படும் கிணறுகளின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர்.
இதேவேளை சிலர் தங்களது குடிநீர் தேவைகளுக்காக குழாய் நீர்வசதிகளை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இயற்கை நீர்வளங்களை மையமாக வைத்து கிராமிய நீர்விநியோக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் சிலர் சிறுதொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடன் குடிநீர் அடைக்கப்பட்ட போத்தல்கள் உற்பத்திகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டட நிர்மாணபணிகள், காடழிப்பு போன்ற காரணங்களினால் இயற்கை நீர்நிலைகள் அழிந்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாத்தளை மாநகருக்கு நீர் விநியோகம் செய்யும் சுதுகங்கைக்கு அருகாமையில் இவ்வாறான சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதால் அதன் இருமருங்கிலும் இருக்கும் நீர் ஊற்றுகள் வற்றிபோகக்கூடிய ஆபத்தான நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.










