இதுவரை காலமும் மின்சாரக் கட்டணங்களை வழங்கும் போது பின்பற்றப்பட்டு வந்த அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் கட்டணப் பட்டியல் முறைக்குப் பதிலாக மூன்று புதிய முறைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் பாவனையாளர்களுக்கு மாதாந்த மின் கட்டணங்களை வழங்குவதில் கீழ்வரும் முறைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
1. Thermal printed bills- அச்சிடப்பட்ட சிறு கட்டண பட்டியலைவழங்குதல்
2. குறுஞ்செய்தி (SMS) மூலம் – மாதாந்த கட்டணத்தைப் படித்த பிறகு, மாதாந்த மின்சாரக் கட்டணம் CEB இல் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும். இதற்கு பதிவு செய்ய, CEB பிரதிநிதியின் உதவியைப் பெறலாம். அல்லது “REGபத்து இலக்க மின்சாரக் கணக்கு எண்” என்று 1987க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உங்களைப் பதிவு செய்யலாம்.
3. CEBCare மொபைல் செயலியைப் பயன்படுத்தி மாதாந்த கட்டண விபரங்களை அறிந்துகொள்ளக்கூடிய வசதியைப் பெறலாம். மேலும், மின்னஞ்சல் ஊடாகவும் மின்கட்டண விபரங்களை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தற்போதைய காகித தட்டுப்பாடு காரணமாக மின்கட்டணத்தை முன்கூட்டியே அச்சடித்து விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதால், இந்த புதிய முறைகளை கையாண்டால் செயல்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, கடதாசி அச்சிடும் செலவை கட்டுப்படுத்தலாம் என்பதாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
