மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
மின் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதியாகத் குறிப்பிட்டு எதிர்கட்சித் தலைவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இலங்கை மின்சார சபை வழங்கிய தரவுகளுக்கமைய 52,000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
அத்துடன் மதிப்பிடப்பட்டதை விட நீர் மின்னுற்பத்தி அதிகரித்தமை மற்றும் மின்சாரத்திற்கான கேள்வி, குறைவடைந்தமையால் 26,000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை தவிர, மின் அலகொன்றின் விலை 18 வீதத்தினால் அதிகரித்தமையினால் மேலும் 26 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
” நாட்டில் வினைதிறனான மின் உற்பத்தி கொள்கை இல்லாததால்,மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும்,வினைதிறனான சேவை வழங்குவதிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைந்த மட்டத்தில் கொடுக்கக்கூடிய தருணத்தில், இதை மையமாக கொண்ட எந்த வேலைத்திட்டமும் நாட்டில் இல்லாததால், இது பெரும் பிரச்சினையாக உள்ளது. அனைத்து மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காகவும் வேண்டியே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் தெரிவித்தார்.










