மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டபோதிலும், அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் சபையில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் நெருக்கடிக்குள் வாழும் நிலையில் , மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்வது? இப்படியான மனிதநேயமற்ற முடிவுகள் எடுக்கப்படக்கூடாது. ” – என்றார்.