சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
” மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
அதுபோலவே, எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.
எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர்.
எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.