மீண்டும் பலத்தை காட்டியது அரசு! ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!!

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வரவு- செலவுத் திட்டத்தின் 3ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமானது.

ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்த பின்னர், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளித்து உரையாற்றினார். மாலை 6.08 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சிகள் பாதீட்டின் 3ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதனை ஆதரித்து வாக்களித்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன.

வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தீர்மானம் எடுத்திருந்தாலும், கட்சிகளின் முடிவுக்கு மாறாகவே அக்கட்சிகளின் எம்.பிக்கள் வாக்கித்தனர். கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பாதீட்டை எதிர்த்து வாக்களித்தனர்.

அரச பங்காளிக்கட்சிகள், அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தன. இதனால் பாதீட்டின்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசு இழக்கும் எனக் கூறப்பட்டது. ஆனாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்று பாதீட்டை நிறைவேற்றியுள்ளார் நிதி அமைச்சர் பஸில்.

Related Articles

Latest Articles