ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை வெற்றியடைய செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமது கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் கட்சிக்கு திரும்புமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,
“மக்கள் மற்றும் கொள்கைகள்மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. சவால்மிகு தருணத்திலேயே இளைஞர்களின் தலைமைத்துவம் தேவை. அந்த பணியை நான் செய்வேன். மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன்தான் எமக்கு டீல் உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் சென்றவர்களை மீள வருமாறு கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் அழைப்பு விடுக்கின்றேன். ஏனெனில் நாம் ஒன்றாக இருந்தவர்கள், எதிர்காலத்திலும் ஒன்றாக முன்னோக்கி பயணிக்க முடியும்.
எனது வெற்றிதான் கட்சியின் வெற்றி, கட்சியின் வெற்றிதான் இந்நாட்டின் வெற்றி. ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி நிச்சயம் வெற்றிபெறும். ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை வெற்றியடையச் செல்வேன்.” – என்றார்.










