‘மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல, கம்பஹா தோட்டங்களில் 221 குடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணம்’

மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல மற்றும் கம்பஹா ஆகிய தோட்டங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படவிருந்த 221 குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஓர், இரு வாரங்களுக்குள் காணிகளுக்கான ஆவணங்கள் மற்றும் காணிகளுக்கான வரைபுகளும் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பில் செந்தில் தொண்டமான் மற்றும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட தலைமை அதிகாரிக்கு இடையில் இன்று மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

மீரியபெத்தை தோட்டத்தை சேர்ந்த 134 குடும்பங்களுக்கும், கம்பஹா தோட்டத்தில் 19 குடும்பங்களுக்கும், லக்கிலேன்ட் தோட்டத்தில் 11 குடும்பங்களுக்கும், அலகொல்ல தோட்டத்தில் 57 குடும்பங்களுக்கும் இவ்வாறு காணிக்களுக்கான ஆவணங்களும், வரைபுகளும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் அம்பட்டிகந்த, லெச்சர்வத்த உட்பட சில தோட்டங்களை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Paid Ad