மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுத்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோதுகூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பிக்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
