‘மூன்றாம் உலகப் போர்’ பற்றி ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவிகளை அளிக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கான உண்மையான அச்சுறுத்தல் பற்றி ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோவ் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது, போருக்குச் சமம் என்று கூறியுள்ளார். ரஷ்யா அவற்றை இராணுவ இலக்காகக் கருதும் என்று அவர் எச்சரித்தார்.

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் நேட்டோ கூட்டணி அடிப்படையில் ரஷ்யா மீது போர் தொடுத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது பற்றி ஏற்கனவே ரஷ்யா எச்சரித்திருக்கிறது.

இதற்கிடையே நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யா இந்தப் போரில் வெல்ல முடியாது என்று அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யத் துணைத்தூதர் டிமிட்டிரி போலியான்ஸ்கி, உக்ரைனுடன் போர்நிறுத்தம் செய்துகொள்வதில் அர்த்தம் இல்லை என்றும், உக்ரைன் ரஷ்யாவை மட்டம்தட்டவே அத்தகைய போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா உக்ரைனுக்குப் புதிய தூதராக பிரிஜட் பிரிங்க்கை அறிவித்த பின்னர் ரஷ்யா புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் அழைப்பில் 40 நாடுகள் ஜெர்மனியில் பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்துகிறது. இதில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. போர் முடிந்த பின் அந்த நாட்டின் நீண்டகால பாதுகாப்பு ஏற்பாடு பற்றியும் இங்கு பேசப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் ஐரோப்பிய கூட்டணி மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்நிலையில் ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது என்றார். “இது உண்மையானது யாரும் இதை குறைத்து மதிப்பிடமுடியாது” என்றார்.

Related Articles

Latest Articles