‘மேற்குலகின் ஒத்துழைப்பு இன்றி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிரானது என காண்பித்து அரசியல் நடத்தாமல், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் . மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரம் மேம்படும். – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தும் மனித உரிமைகள் பேரவையை, நாட்டுக்கு எதிரான அமைப்பாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். மனித உரிமை என்பது அனைத்து இன மக்களுக்கும் உரித்தானது.  எனவே, அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்கூட. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவே இலங்கை மக்களுக்கு ஜெனிவாவைக்காண்பித்தார்.

போர்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு அப்பால் ரதுபஸ்வெல துப்பாக்கிச்சூட்டு சம்பவம், வெலிகடை சம்பவம், அண்மையில் அரங்கேறிய மாஹர சிலைச்சாலை  சம்பவம் ஆகியனவும் மனித உரிமை விவகாரத்தில் உள்ளடங்கும்.

மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் என்பது இரண்டரக்கலந்தவை. எனவே, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்காது, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.  1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கைக்கு மேற்குலக நாடுகள் கொடையாக எதையும் வழங்கவில்லை. எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. சலுகையும் இல்லாமல்போனால் என்ன நடக்கும்? மனித உரிமை விவகாரத்தையும் அரசியல் மயப்படுத்தியதாலேயே இந்நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கையும் மனித உரிமைகளை மதிக்கும் நாடாக மாறவேண்டும். ஜெனிவாவில் இலங்கைக்கு 21 நாடுகள் ஆதரவு வழங்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த 21 நாடுகளில் எந்தவொரு மேற்குலக நாடும் இல்லை.  மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles