மேலும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்க எதிரணி திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மேலும் இரு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் கலந்துரையாடி வருகின்றன.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகிய இருவருக்கு எதிராகவே தனித்தனியாக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இவ்விரு அமைச்சுகளும் விவசாயிகள் உட்பட மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவரும் நிலையில், தேசிய சொத்து விற்பனை, முறையற்ற தீர்மானங்கள், விலைமனுகோரலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி உள்ளிட்ட காரணங்களை மையப்படுத்தியே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக அண்மையில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் சாதாரண பெரும்பான்மையை (113) தக்கவைத்துக்கொள்ளவே கடுமையாக போராட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

எனவே, பிரேரணைகளை வெற்றிபெற வைப்பதைவிடவும் அரசுமீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது.

Related Articles

Latest Articles