ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தற்போது 30 சதவீதமான வாக்குகளே உள்ளன, கட்சி பிளவுபட்டால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாமல்போகும் – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டத்தை நான் முன்வைத்துள்ளேன், என்னை வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சியே முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் மிக்பெரிய கட்சியாக கருதப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தற்போது நூற்றுக்கு 30 வீதமான வாக்குகளே உள்ளன. கட்சிக்குள் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. எனவே, 51 வீதம் வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளர் ஒருவரே நிறுத்தப்படுவார் எனவும் கூறப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிளவுபட்டால் வெற்றியிலக்கை நோக்கி பயணிக்க முடியாது, 51 வீதம் என்ற வாக்கு இலக்கை அடைய ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும். ஒன்றிணைந்து இருந்தால் நிச்சயம் 51 வீதம் என்ற இலக்கை அடையலாம். தற்போதுள்ள 30 வீதத்தை 51 வீதமாக்க முடியுமா என்பது பற்றி பரீசிலிப்போம் என நான் கூறினேன். ஏனெனில் என்னிடம் சிறந்த வேலைத்திட்டம் உள்ளது.
எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக அல்ல, நாட்டு மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றேன். 5 வருடங்கள் என்பது, நாளொன்றுக்கு 8 மணிநேரம் என எடுத்துக்கொண்டால் 9 ஆயிரம் மணித்தியாலங்களே உள்ளன, அந்த காலப்பகுதிக்குள் நாட்டை மீட்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நான் பத்திரிகைகளில் பிரசாரம் செய்யவில்லை. அதுகூட ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்ககூடும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்துக்கும் தெரியப்படுத்தினேன்.” – என்றார்.










