உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுமையாக விசாரணை நடத்தப்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதுவிடயத்தில் யார் அவசரப்பட்டாலும் அரசாங்கம் அவசரப்படமாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
ரவி செனவிரத்ன மற்றும் ஷான அபேசேகர ஆகியோரை இலக்கு வைத்தே கம்மன்பில செயற்படுகின்றார் எனவும் அவர் கூறினார்.
பிவிருதி ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவால்
வெளியிடப்பட்ட இமாம் விசாரணைக் குழு அறிக்கையை அரசு ஏற்கின்றதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜித ஹேரத்,
“ அரசாங்கம் என்ற வகையில் நாம் முழுமையான விசாரணைகளை செய்வோம். அதன்பின்னரே விடயங்களைக் குறிப்பிட முடியும்.
இது ஜனாதிபதியால் நியமிக்கப்படு விசேட அதிகாரம் உடைய ஜனாதிபதி விசாரைணக்குழு அல்ல. மாறாக ஜனாதிபதிக்கு தகவல்களை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட குழுவாகும். அந்த குழுவின் அறிக்கையை நாம் ஏற்கவில்லை.
சனல் – 4 காணொளி வெளியான கையோடு, விசாரணை இன்றியே அது போலியென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை விட்டிருந்தார். விசாரணை நடத்தாமல் எவ்வாறு குறிப்பிட முடியும்?” – என்றார்.