” பிணைமுறி விவகாரம், ஐக்கிய தேசியக்கட்சிக்கு துரோகமிழைத்தது யார் என்பது உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சஜித் பிரேமதாசவுடன் நேரில் விவாதிப்பதற்கு நான் தயார். சஜித் அணி மொத்தமாக வந்தாலும் தனி ஒருவனாக பதிலடிகொடுப்பேன்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய திருடன் கொழும்பு மாவட்டத்தில் இருப்பதாக சஜித் குறிப்பிடுகின்றார். இது உங்களை நோக்கி தொடுக்கப்படும் விமர்சனம்தானே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரவி கருணாநாயக்க இந்த சவாலை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் நபரும் கொழும்பில்தான் இம்முறை போட்டியிடுகின்றார். சிலவேளை, அவராகவும் இருக்ககூடும். அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நான் செல்வந்தன். மக்களுக்கு சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன். ஆனால், தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்துகின்றனர்.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதனை நிரூபிப்பதற்கு நான் தயார். விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பதிலடியும் கொடுப்பதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றேன். முடிந்தால் சஜித்தை விவாதத்துக்கு வரசொல்லுங்கள். தனியாக முடியாவிட்டால் அவரை சூழவுள்ளவர்களையும் அழைத்துவர சொல்லுங்கள்.
சஜித், சம்பிக்க, அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன என எல்லோரையும் வரட்டும். அவர்களின் வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றுவேன்.
அதேவேளை, எனக்கும் கொழும்பில் உள்ள பாதாளகுழுக்களுக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாலேயே என்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.” – என்றார்.