” யுக்திய ஒப்பரேஷன் நடவடிக்கையை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தினால் அது மற்றுமொரு சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கரையோரப் பகுதிகளில் உள்ள சில ஹோட்டல்களை பொலிஸார் டோசர்களைக்கொண்டு இடிப்பதை காணமுடிந்தது. கரையோர பாதுகாப்பு திணைக்களமொன்று உள்ளது. அத்திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், கரையோரப்பகுதிகளில் எவ்வாறு கட்டடம் அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஏற்பாடுகளைமீறினால் கட்டடங்களை இடித்தழிக்கும் அதிகாரம் அத்திணைக்களத்துக்கு உள்ளது. நீதிமன்றத்தைநாடி, அதன் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் விற்பனைமூலம் கிடைக்கப்பெற்ற ஹோட்டல் எனக்கூறியே பொலிஸார் இடித்தழிக்கின்றனர். தெரிவுசெய்யப்பட்ட சில ஹோட்டல்களை மட்டும் இவ்வாறு நீக்குவதாக இருந்தால் அது முறையற்ற நடவடிக்கையாகும். எனவே, யுக்திய ஒப்பரேஷன் என்ற போர்வையில் தெரிவுசெய்யப்பட்ட சில ஹோட்டல்கள்மீது சூடு நடத்தும், சில ஹோட்டல்களை இடிப்பதுமான நடவடிக்கை இடம்பெற்றால் அது தவறு. இது பற்றி முறையாக ஆராயப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களை படைகளைக்கொண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 இல் மஹிந்த வீடு செல்வதற்கு இதுவும் காரணமாக அமைந்தது.
யுக்தியமூலம் தாயும், தந்தையும் கைது செய்யப்படுகின்றனர். இதன்மூலம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது மற்றுமொரு சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கக்கூடும். ” – என்றார்.










