” எமது அரசியல் எதிர்வாதியாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுடனேயே நாட்டு நலன் கருதி இணைந்து செயற்பட முடியுமெனில் விமல் தரப்பினருடன் ஏன் செயற்பட முடியாது. அவர்களுடனும் நிச்சயம் பேச்சு நடத்தப்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல்கூட இருக்கலாம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்த விடயம் மற்றும் விமல் அணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அதிகளவு வேட்பாளர்கள் உள்ளனர். அதனால்தான் அவர் (மஹிந்த ராஜபக்ச) அவ்வாறு தெரிவித்திருக்கக்கூடும். பொருத்தமான நபரை நிச்சயம் நாம் தெரிவுசெய்வோம்.
மஹிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிமசிங்கவும்தான் அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தனர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எமது அரசியல் எதிராளியாக ரணில் விக்கிமசிங்கவே இருந்தார். நாட்டு நலன் கருதி அவரை ஆதரித்தோம்.
எனவே, அன்று முதல் எம்முடன் இருந்து – எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடிய தலைவர்களுடன் நாம் நிச்சயம் பேச்சு நடத்துவோம்.” – என்றார்.
