ரணில் அரசு ஆட்டம் காணும் – எங்கள் ஆட்சியில் தமிழருக்கு தீர்வு மலரும் ! சஜித் நம்பிக்கை

“புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம், அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மீண்டும் ஏமாற்ற ரணில் – ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது. ஆனால், அது சரி வராது” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் – ராஜபக்ச நிலையான அரசு அல்ல. இது ஆட்டம் காணும் அரசு. இந்த அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முட்டாள்கள் அல்லர்.

அதேவேளை, ராஜபக்சக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பத் தமிழ் மக்கள் தயாராகவில்லை.

மலரவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்கியே தீருவோம்” – என்றார்.

Related Articles

Latest Articles