ரணில் – ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி அழைப்பு!

” பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான பொறிமுறை ரணில் – ராஜபக்ச அரசிடம் இல்லை. மாறாக மக்கள்மீது வரிசுமை திணிக்கப்படுகின்றது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் ஊடாகவும் வரி அதிகரிப்புகள் இடம்பெறவுள்ளன. எனவே, மக்களை வதைக்கும் இந்த அரசுக்கு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச தொடர்பு உள்ளது, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பார் எனக்கூறியே மொட்டு கட்சியினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினர். ஆனால் வெளிநாட்டு கடன் சுமை அவ்வாறே உள்ளது. ஒரு டொலர் ஏனும் கழிக்கப்படவில்லை. அத்துடன், மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நிலை காணப்படுகின்றது.

மின் கட்டணம் அதிகரித்துள்ளது, எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. வரவு – செலவுத் திட்டம் ஊடாக சொத்து வரி உட்பட மக்களை சுரண்டும் வகையில் வரி விதிப்பு யோசனைகள் வரவுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படவுள்ளது. இவ்வாறு மக்கள்மீது மென்மேலும் சுமைகளை திணிக்கும் வகையிலான ஏற்பாடுகளே இடம்பெற்றுவருகின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான பொறிமுறை இந்த அரசிடம் இல்லை. மாறாக சர்வதேச நாணய நிதியத்தைநாடி, அந்த நிதியம் கூறும் தாளத்துக்கேற்ப ஆட்சியாளர்கள் ஆடுகின்றனர். மக்கள் பக்கம்நின்று சிந்திக்காது, ஐஎம்எப் யோசனையின் பிரகாரம் எல்லா விதத்திலும் வரி அறிவிடப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles