ரஷ்யா, உக்ரைன் போர் 2022 ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும் ரஷியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் நீடிக்கிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்கின்றன.
இந்நிலையில் ரஷியாவுக்கு வடகொரியா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது. உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஆதரவாக வட கொரிய படைகளும் போரிட தயாராகிவருகின்றன.
இதற்காக 10 ஆயிரம் படையினரை வடகொரியா ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“ வடகொரிய படையினரில் சிலர் ஏற்கனவே உக்ரைனை நெருங்கி உள்ளனர். ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளுக்கு எதிரான போரில் இவர்களை பயன்படுத்த ரஷ்யா உத்தேசித்துள்ளது.”- என்று அமெரிக்க பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய படையினரை போரில் பயன்படுத்துவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத போரில் வடகொரிய படையினர் பயன்படுத்தப்படுவதை கண்டிக்கின்றோம் எனவும், இது தொடர்பில் நேட்டோ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளோம் எனவும் தனது எக்ஸ் தளத்தில் வெளிவிவகார அமைச்சர் பதிவிட்டுள்ளார்.