இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையிலேயே இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘‘இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது. இதேபோல இந்தியா – அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, வரி விதிப்பால் அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் சராசரி குடும்பத்தினரின் வீட்டு செலவு ஆண்டுக்கு 2,400 டாலர்வரை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.