பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு இன்று (15) தமது ஆட்சேபனையை தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.
குறித்த வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் தமது ஆட்சேபனையை இன்று தொழில் ஆணையாளரிடம் சமர்ப்பித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள உற்பத்திக்கு ஏற்றாற்போன்ற சம்பள அதிகரிப்பை வழங்க தாம் தொடர்ந்தும் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.