” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை கோரியது யா? ஜனாதிபதியா, தொழிற்சங்கங்களா? அல்லது பெருந்தோட்ட மக்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
அத்துடன், சம்பளம் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு நாடகமாக அமைந்து விட கூடாது.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
” பெருந்தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்படுகின்றன. தோட்டங்களின் காணிகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பௌதீக வளங்கள் விற்கப்படுகின்றன. தோட்ட கம்பனிகள் பெருந்தோட்டங்களை திட்டமிட்டு வீழ்ச்சிக்கு தள்ளுவதை பிரதான இலக்காக கொண்டுள்ளன.
பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் மீதான விவாதம் நேற்று இடம்பெறும் என்று அறிந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தோட்ட கம்பனிகளுடன் பேச்சில் ஈடுபட்டார். இது ஒரு நாடகமாக அமைய கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
1700 ரூபா சம்பளம் என்பதை யார் நிர்ணயித்தது, தொழிற்சங்கங்களா? ஜனாதிபதியா? அல்லது பெருந்தோட்ட மக்களா ?என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 1700 ரூபா ஒருபோதும் சாத்தியமற்றது. 1700 சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசகருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.” – என்றார் .










