லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழியில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, யாழ்ப்பாண நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், அதற்கு முதல் நாள் அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் வைத்து மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, லலித் மற்றும் குகன் ஆகியோரின் உறவினர்களினால் கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைகளின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

இவ்வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக, கடந்த 2017ஆம் ஆண்டு மனுதாரர் தரப்புச் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகிச் சாட்சியமளிக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், அப்போதைய நாட்டின் பாதுகாப்புச் சூழல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புத் தனித்துவங்களைக் காரணம்காட்டி, தன்னால் யாழ்ப்பாணத்துக்கு நேரில் வருகை தர முடியாது எனத் தொடர்ச்சியாகக் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பால் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே, தாம் நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதில் தனக்குக் காணப்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பில் விரிவான சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கோட்டாபய ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசியைப் பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அவர் நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றித் தனது சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles