லெபனானில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 35 குழந்தைகம், 58 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க லெபனானின் தெற்கு கடலோர நகரமான சிடோனில் இருந்து குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிக்கணக்கானோர் தெற்கு லெபனானில் இருந்து வடக்கே இடம் பெயர்ந்துள்ளதாக லெபனான் அமைச்சர் நாசர் யாசின் தெரிவித்தார்.
1990 இல் முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு லெபனானில் போரினால் தினசரி அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை இதுவாகும் என்றும் பல தசாப்தங்களிற்குப் பிறகு லெபனானின் மிகக் கொடிய நாள் இதுவென்று லெபனான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
லெபனான் பாடசாலைகளில் 89 தற்காலிக தங்குமிடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இதுவரை 26,000 இற்கு அதிகமான மக்கள் தங்குவதற்கான திறன் கொண்டதாக அவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திங்களன்று தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா குழுவுடன் தொடர்புடைய 1300 இலக்குகளை தாக்கியதாகவும் நாங்கள் தாக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஆயுதங்கள் உள்ளன” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார் .
“தயவுசெய்து இப்போது தீங்கு விளைவிக்கும் வழியிலிருந்து வெளியேறுங்கள், எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று லெபனான் மக்களிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கோரியுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடையே வன்முறை அதிகரித்து ஒரு பெரிய பிராந்திய போரின் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக திங்களன்று அமெரிக்கா அறிவித்துள்ளது.