பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.
போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது. போர் தொடங்கி 300 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார்.
மறுபுறம் இப்படி பேசிக்கொண்டே பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் கூர்மைப்படுத்தியுள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அமைப்புகள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டிருக்கிறார் என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஆனால் ஹிஸ்புல்லா இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஹில்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும் எனவேதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
ஆனால் லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, “அப்பட்டமான இஸ்ரேலிய தாக்குதல் இது” என கண்டனம் தெரிவித்துள்ளார். ஃபுவாட் ஷுக்ர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடந்த 1983ம் ஆண்டு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க கடற்படைக் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 241 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக ஃபுவாட் ஷுக்ர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல இப்போத இஸ்ரேலுக்கு இவர் தலைமையிலான ஹில்புல்லா அமைப்பினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர். எனவே இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து தற்போது கணக்கை இஸ்ரேலும் அமெரிக்காவும் தீர்த்துக்கொண்டிருக்கிறது.