லெவலன்ட் தோட்டம் மக்களுக்கு விரைவில் காணி உறுதி பத்திரம்

” லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவு மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் நிச்சயம் வழங்கப்படும். அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விரைவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி, லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவில் வாழும் 60 குடும்பங்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கண்டிக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்ன, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் விசேட பிரதிநிதியாக பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் உப தலைவரும், முன்னாள் சபை முதல்வருமான மதியுகராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர், தோட்ட தலைர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பாரத் அருள்சாமி கூறியதாவது,

” இப்பகுதி மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு உதவிகளை வழங்கிய இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சார்பாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும், இலங்கை அரசாங்கம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வீடுகள் அமைக்கப்பட்டாலும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த அரசாங்கம் அதனை செய்யவில்லை. இதனால் ஒரு வருடத்துக்கு மேலாக இவ்வீட்டுத்திட்டம் திறக்கப்படவில்லை.

மக்கள் நலன்கருதியே தற்காலிக ஏற்பாடாக வீடுகள் திறக்கப்பட்டன. விரைவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்படும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் கடந்தகாலத்தில் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. எனவே, இனி கண்டி மாவட்டம் முழுவதும் இ.தொ.காவின் சேவைகள் தொடரும்.

மறைந்த அமைச்சர் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி இந்திய வீடமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதனடிப்படையில் முதலாவதாக இந்திய அரசாங்கம் 4000 வீடுகளை வழங்கியது, அதன்பின் இந்திய பிரதமர் டிக்கோயா பகுதிக்கு வருகை தந்த பொழுது மேலதிகமாக 10,000 வீடுகளை தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மலையகம் முழுவதும் வீடமைப்பு திட்டங்கள் துரித கதியில் இடம்பெறும்.

கிராமம் என்று பெயர் வைப்பது முக்கியம் இல்லை. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் குறித்த வீட்டு திட்டத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் செய்து கொடுத்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தவறிட்டார்கள்.

எனவே கடந்த அரசாங்க காலப்பகுதியில் இருந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் பல குற்றங்கள் மற்றும் ஊழல்களை செய்ததால் தான், மக்கள் நல்லாட்சி என்ற அரசாங்கத்தை நிராகரித்து விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

எனவே மக்களின் எதிர்ப்பார்பை இந்த அரசாங்கத்தின் ஊடாக எங்களின் அமைச்சின் கீழ் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

ஆட்சி அதிகாரம் இல்லாதநிலையிலும் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து கண்டி மாவட்ட மக்கள் எமக்கு வாக்களித்தனர். எனவே, தற்போது எமது பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சராக இருக்கிறார். அவரின் வழிகாட்டலுடன் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட பகுதிகளும் அபிவிருத்தியடையும். இதற்கு அப்பகுதியிலுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” -என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles