இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விகாராதிபதி ஸ்ரீ ஜனாநந்தபிதான தேரரின் கோரிக்கைக்கமைய கடவத்தையில் வசிக்கும் ஜகத் சுமித்ர கருணாரத்ன மற்றும் மல்லிகா கருணாரத்ன ஆகியோரின் நன்கொடையில் மங்கெதர டெம்பிடி புராதன விகாரையில் தங்கவேலி அமைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஜகத் சுமித்ர கருணாரத்ன மற்றும் மல்லிகா கருணாரத்ன ஆகியோருக்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் இதுவரையில் எமக்கு கிடைக்காமலிருக்கும் வௌிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அது மட்டுமன்றி, இலங்கையுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியிருந்த வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் கொடுக்கல் வாங்கல் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதனால் நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும், அதனூடாக மக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த நாட்களில் நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதன் பின்னர் கட்டியெழுப்படும் பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். 2022 ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, சர்வதேச நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இலங்கைக்கு கடன் வழங்குவதை நிறுத்தின. அதனால் முதலில் அந்த தடையை நீக்கிக்கொள்ள, நாம் கடனை மீளச் செலுத்தும் வல்லமையுள்ள நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதார நெருக்கடியிருந்து நாட்டை மீட்பதற்காக ஒரு வருடத்திற்குள் தீர்மானமிக்க பணிகளை ஆற்றியுள்ளோம். இதேநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது கடுமையான பணி என்ற போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.
அதற்குரிய பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
அதேபோல் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பணிக்குழு, சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளது. அதேபோல் சீனாவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். மேலும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறோம். நிதி அமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்று மேற்படி குழுவினருடன் கலந்துரையாடவுள்ளனர்.
அதன்படி வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும்.
தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்டசத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும். அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும்.
நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம்.” – என்றார்.










