வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.