“பட்டலந்த வதை முகாமில் பயிற்சிபெற்றவர்கள், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ஒரே இரவில் 186 பேரை கொலை செய்தனர். இப்படி வடக்கு, கிழக்கில் பல வதைகளும், கொலைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, வடக்கு, கிழக்குக்கும் நீதியின் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
” பட்டலந்த வதை முகாமில் சித்திரவதை தொடர்பில் பயிற்சி பெற்றவர்கள், 1988, 89 களில் ஜே.வி.பி. இளைஞர்களை சித்திரவதை செய்தவர்கள், பின்னர் அப்படியே 90 காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்து சித்திரவதைகளை செய்தனர்.
குறிப்பாக சத்துருக்கொண்டானின் 90 ஆம் ஆண்டில் சுற்றிவளைப்பு செய்யப்பட்டு 186 பேர் முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் ஐவர் விசேட தேவை உடையவர்கள். இந்த 186 பேரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.” என தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணை நடைபெற்றது. 35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் நீதி பரிகாரம் கிடைக்கவில்லை. நீதி கதவை தற்போது திறந்துள்ளீர்கள். வடக்கு, கிழக்கில் இப்படி பல கொலை இடம்பெற்றுள்ளன.
சகலருக்கும் நீதி என்ற அடிப்படையில் உங்களால் வடக்கு, கிழக்குக்கும் நீதியின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். அநீதியாயம், அராஜயகம் செய்த கொடியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.