இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால் எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களை கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. , மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் கொன்றது. இந்திய மருத்துகளை கொண்டுவந்த அதிகாரிகளையும் அக்கட்சி கொலை செய்தது. இந்திய பொருட்களை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. எனவே, அந்த கட்சியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது.
வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்திகளை செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாசதான் என்பதை அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். அதேபோல வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்கு சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.” – என்றார்.










