” மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு உயர் மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர வன்முறையினால் தீர்வு காண முற்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரான பா. சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (21) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உயர் மட்டத்தில் – அதாவது பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் , ஜனாதிபதியுடனும் பேசி நிரந்தர தீர்வு காண முற்பட வேண்டும். அதை விடுத்து திருப்பி அடிப்பதற்கு உசுப்பேத்தி விடுவதும், களத்துக்கு சென்று அவர்கள் பாணியில் பதில் சொல்வதாக நடந்து கொள்வதும் தீர்வாகி விடாது.
இவ்வாறான நடவடிக்கையால் பழிவாங்கல் நடவடிக்கை ஆரம்பமாகலாம். இனவாதம் கக்கப்படலாம். இவை கடந்த காலங்களில் நாம் எதிர்நோக்கியுள்ள யதார்த்தபூர்வமான சூழ்நிலையாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறான கடும்போக்கு நிலையினை தொடராத போதும், கண்டி, மாத்தளை, குருநாகலை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறைகளை கையில் எடுக்கும் பொழுது அது மீண்டும் அவர்களையே எதிர்வினை ஆற்றுகின்ற சம்பவங்கள் நிறையவே நடந்தேறியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தைதவிர ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையினருடன் கலந்து வாழ்கின்ற நிலையில் அவர்கள் மீதான இன ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றபோது இன்று உசுப்பேற்றி விடுகின்ற தலைவர்கள் இருக்கமாட்டார்கள்.
எனவே வன்முறைகளினால் தீர்வு காண முனைவது இயலாமையே. ஏற்கனவே பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகள் தொடந்தால் அது இன்னும் முகாம்கள் அமைக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” – என்றுள்ளது.
