வரிசையில் நிற்கும் நிலை மாற மாதம் 500 மில். டொலர் தேவை

எரிபொருள் மற்றும் கேஸ் வரிசைக்கு முடிவு காணவும் மருந்துத் தட்டுப்பாட்டை போக்கவும் மின்வெட்டை நிறுத்தவும் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டபூர்வமுறையின் கீழ் வங்கிகளினூடாக நாட்டுக்கு பணம் அனுப்பினால் இதற்கு முடிவு காண முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தமது சகோதர சகோரிகள் மற்றும் அயலவர்கள் இவ்வாறு வரிசையில் நின்றும் மருந்து இன்றியும் கஷ்டப்படுகையில் 500 மில்லியன் பெறும் முயற்சிக்கு பங்களிக்குமாறு வெளிநாட்டில் பணிபுரிபவர்களிடம் வேண்டுகோள்விடுத்த அவர் இதன் மூலம் வரிசையில் நிற்கும் மக்களின் கவலையை போக்குமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு டொலர் அனுப்புவர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கவும் மேலும் பல சலுகைகளை வழங்கவும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலவச கல்வியூடாக கற்று வௌிநாடுகளில் உழைக்கும் பலரும் நாட்டுக்க உதவ விருப்பம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் நாட்டு மக்களின் நலனுக்காகவே தாம் அமைச்சு பதவியை ஏற்றதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,நாடு வங்குரோத்து அடையும் நிலையை எட்டியுள்ளது.கடன் மீளச் செலுத்துவதில் சிக்கல் உள்ளது.கேஸ்,எரிபொருளுக்கு மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளதோடு மருந்துத் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. மின்வெட்டும் முன்னெடுக்கப்படுகிறது. வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மாதாந்தம் 500 மில்லியன் ரூபா அனுப்பினால் இந்த அத்தியாவசிய அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 200-300 மில்லியன் டொலர்கள் வரையே அனுப்பப்படும் நிலையில் இதனை 500 மில்லியனாக அதிகரித்தால் வரிசையில் மக்கள் அவலப்படும் நிலையை மாற்றலாம்.

உங்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் உங்கள் யோசனைகளை பெறவும் 07771442500 எனும் தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்துள்ளோம்.உங்கள் பிரச்சினைகளை இந்த வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles