இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியமையானது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார் இவ்வாறு தெரிவித்தார்.
” இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நாட்டு மக்களை இந்த அரசு வதைப்படுத்தியது. இதற்கு எதிராக விவசாயிகள் வீதிக்கு இறங்கினர். இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு மீளப்பெற்றுள்ளது. இது அரசின் இயலாமையை வெளிப்படுத்துகின்றது.
எந்தவொரு திட்டமும் முறையாக வகுக்கப்படவேண்டும். இது தொடர்பான அரசின் அணுகுமுறை தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு நாமும் ஆதரவு வழங்கினோம்.” – என்றார்.