வற் வரி திருத்தப்படுமா? ஜனாதிபதி கூறியது என்ன?

“ வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன.

2023 இறுதியில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1,000,029 ஆக உயர்ந்துள்ளது. இது 130 சதவீத அதிகரிப்பு. வரி வலையமைப்பு விரிவடையும் போது, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஏற்படும் வரிச்சுமை குறையும். மேலும், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைத் தொடரும்போது, பொருளாதாரம் ஸ்திரமாகும்போது, வரிச்சுமையைக் குறைப்போம். வற் வரியின் சதவீதத்தை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையளவு கடனைச் சுமந்துகொண்டுதான் இதையெல்லாம் செய்கிறோம். கடந்த காலம் முழுவதும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்து மீள் திட்டத்தைத் தயாரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். முதல் கட்டமாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது.
தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த சிக்கலான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இது நமது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமையும். மேலும் கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையின் மையமாக இது மாறிவிட்டது.

ஐ.எம்.எப், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த ஆண்டு 2 வீதம் முதல் 3 வீதம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணித்துள்ளன. 2025இல் அதை 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

2021 ஆம் ஆண்டில், தீயில் விழிந்திருந்த நாட்டை மீட்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்தோம். 2021 ஐ விட சில விடயங்களை 2022ஆம் ஆண்டு மேம்படுத்திக் கொண்டோம். 2022 ஐ விட 2023 எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொண்டோம். 2024. இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், 2025 இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆனால் அதில் மாத்திரம் திருப்தி அடைய முடியுமா?

வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. ஆனால் மறுசீரமைப்புக்குப் பிறகு நாம் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை மீளச் செலுத்த ரூபாவைப் போன்று டொலர்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.

2023 செப்டெம்பர் மாத மளவில் மொத்தக் கடன் 91 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. இந்த கடன்களை செலுத்த நீண்ட காலம் அவசியப்படும். அதற்காக நாம் தேசிய மட்டத்தில் வருமானம் ஈட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் கடன் பிடிக்குள் சிக்கிக்கொள்வோம்.

கடன் மறுசீரமைப்பு காரணமாக வருடமொன்றிற்காக நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கடனில் சிக்கியிருக்க முடியாது. அதேபோல் கடன் பெறவும் முடியாது.

அதேபோல் எமது வரவு செலவுக்கு இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை பாரதூரமானது. இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles